ரவீந்திர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையின்போது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!
பாதுகாப்பு படைகளின் அலுவலகப் பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையிடையே ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரவீந்திர விஜயகுணரத்ன இன்று நீதிமன்றில் சட்டத்தரணியூடாக சரணடைந்த நிலையில் அவரை புகைப்படம் எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர்களை கோட்டை நீதிவான் நீதிமன்ற பிரதான வாயிலுக்கு வெளியே சிவில் உடையில் வந்த குழுவொன்று திட்டமிட்டு தாக்கியுள்ளது.
இதையடுத்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் தம்மை தாக்கிய குழுவினரை துரத்திச் சென்றவேளை நீதிமன்றத்திலிருந்த கொம்பனித் தெரு பொலிஸாரும், பாதுகாப்பு கடமைகளில் இருந்தவர்களும் குறித்த இடத்துக்கு விரைந்தனர்.
இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பிடித்த ஊடகவியலாளர்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன், கோட்டை நீதிவான் நீதிமன்றிலும் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்தனர்.
இதனிடையே நீதிமன்றலிருந்து ரவீந்திர விஜயகுணரத்ன வெளியேறும்போது அவரது வாகனத் தொடரணியில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஊடகவியலாளர்களை மோதி செல்ல முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.