வாகனங்கள் இறக்குமதி கட்டுப்பாடு – எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும்!
வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“வாகன இறக்குமதி கடந்தமாதம் குறைவடைந்துள்ளது. சிறிய ரக கார்களை இறக்குமதி செய்பவர்களுக்கு வரி குறைக்கப்பட வேண்டும். எனினும் தற்போது நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பது இடைக்கால அரசாங்கம் என்பதால், சிறிய ரக கார் இறக்குமதிகளை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியில் செல்வதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும், ஆளுங்கட்சி இல்லாமல் கூடிய நாடாளுமன்றம் உலகில் எங்கும் இல்லை. ஆளுங்கட்சி இல்லாது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு யார் பதிலளிப்பது? இதற்கு சபாநாயகரும், ஐ.தே.கவுக்கு ஆதரவளிப்பவர்களும் தான் பொறுப்புக் கூற வேண்டும்.
இடைக்கால கணக்கு அறிக்கை வாக்கெடுப்பு நடத்தியே நிறைவேற்றப்பட வேண்டும். இடைக்கால கணக்கு அறிக்கை என்பது, அரசியல் தொடர்பான பிரச்சினை இல்லை.
இது நாட்டின் செலவீனங்கள் தொடர்பான பிரச்சினையாகும். எனவே, இடைக்கால கணக்கு அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற தேவையை உணர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றே நாம் நம்புகிறோம்.
உயர் நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும்.” என கூறினார்.