வடக்கு- கிழக்கு காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பர்!
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் 12,000 ஏக்கர் காணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்களென இராணுவம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இராணுவம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 25,000 ஏக்கர் தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பலாலி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேப்பாப்பிளவு, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இக்காணிகள் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் 5 வருட செயற்பாடு கொண்ட வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி 95 சதவீதமான காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படடுள்ளது. மீதமுள்ள 5 வீத காணிகள் மாத்திரமே இராணுவத்தினர் வசம் உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் பாதுகாப்பு தரப்பினரிடம் இருக்கும் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 12000 ஏக்கர் காணிகள், தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய சில காரணங்களுக்காக விடுவிக்கப்படாது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.