இலங்கை அகதிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை!
யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த மக்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் அவர்களை புறக்கணித்து வருவதாக நடிகரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை, தோப்புக்கொல்லை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு நிவாரண பொருட்களை நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைத்தார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
“25 ஆண்டுகளுக்கு முன்பு யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்துக்கு வருகை தந்த மக்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் எந்ததொரு நிவாரணத்தையும் வழங்கவில்லை. ஆகையால் எனது நண்பர் சார்பில் லண்டனிலிருந்து நிவாரணப் பொருட்கள் வரவழைத்து அம்மக்களுக்கு வழங்கியுள்ளேன்.
இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்” என கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.