ஐ.தே.க.வின் கோரிக்கையை கடவுள் கூட ஏற்கமாட்டார்: சுசில்
ஐக்கிய தேசியக்கட்சியினர் கதிர்காமம் வரை பாதயாத்திரை செல்வதாக தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை கடவுள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இணக்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தமது ஆதரவினைத் தெரிவித்திருப்பதன் மூலமே குறித்த இரகசிய இணக்கப்பாடு தொடர்பான விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், தற்போது அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் இடம் பெற்றுவருகின்றன. அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்றாவது தடவையாகவும் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அமைத்துள்ள அரசாங்கத்தினை மாற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.