புளோரிடாவில் கட்டிடத்தின் மீது மோதிய சிறிய விமானம் – இருவர் பலி!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்தில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள ஹில்லியார்ட் நகரை நோக்கி சென்ற சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் புறப்பட்டு சென்ற செஸ்னா 335 ரக சிறிய விமானம் ஒன்றே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது.
குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சிறிது தூரம் சென்றதும் வழியில் நிலைதடுமாறி, மிகவும் தாழ்வாக பறந்த விமானம் ஃபோர்ட் லாடெர்டேல் நகரில் மன இறுக்க (ஆட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சி மையம் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீப்பரவி எரிந்து சாம்பலானது. அதில் இருந்த விமானியும், ஒரு பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியும் தீயால் சேதமடைந்தது. அங்கிருக்கும் பயிற்சி மையத்தில் 8 பெரியவர்களும், 5 சிறார்களும் இருந்து இதில் ஒரு ஆசிரியர் இந்த விபத்தில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
விமானம் திடீரென விபத்துக்குள்ளானமை தொடர்பாக ஃபுளோரிடா பொஸிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.