தேசிய விவசாய துரித வேலைத்திட்டத்தின் கீழ் பயன்தரு கன்றுகள் வழங்கும் நிகழ்வு

“நாம் பயிரிட்டு நாம் உண்போம்” எனும் தேசிய விவசாய துரித வேலைத்திட்டத்தின் கீழ் பயன்தரு கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பகல் பூநகரி கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட விவசாய பிரதி அமைச்சர் அங்கயன் இராமநாதன் பயன்தரு மரக்கன்றுகளை விவசாயிகளிற்கு வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், பூநகரி உதவி பொலிஸ் அத்தியட்சகர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய அங்கயன் இராமநாதன் குறிப்பிடுகையில்,

இன்று டொலரின் பெறுமதி அதிகரித்து வருகின்றது. அதற்கு காரணம் எமது பழக்கவழக்கங்களே. நாம் இறக்குமதி பொருட்களையே அதிகம் வாங்குகின்றோம்.

அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களை நாம் இங்கு உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

அவ்வாறு நாம் எமது நாட்டில் உற்பத்தி செய்யகூடியவற்றை செய்தால் இவ்வாறான சிக்கல்களிற்கு முகம் கொடுக்க வேண்டியதில்லை.

நான் அமைச்சு பொறுப்பெடுத்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த காலப்பகுதிக்குள் 600 மில்லியன் ரூபாவை வடக்கு கிழக்கில் செலவு செய்துள்ளோம்.

அடுத்த ஆண்டில் விவசாய அமைச்சின் ஊடாக வடக்கு கிழக்கிற்கு 3000 மில்லியன் ரூபா ஊடாக விவசாயத்தினை ஊக்குவிக்கும் திட்டங்கள் உள்ளன.

குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Copyright © 4783 Mukadu · All rights reserved · designed by Speed IT net