மஹிந்தவுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்!
யுத்த காலத்தில் தமிழ் இனத்தை அழித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் எவ்வாறு ஆதரவு வழங்குவார்களென நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது சாந்தி மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மையினரின் ஆதரவு அரசாங்கத்துக்கு மிகவும் தேவையாகவுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் வழங்குவதாக விலை பேசுவதுடன், ஆசை வார்த்தைகளை கூறி சிறுபான்மையினரை ஏமாற்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் எமது இனத்தை அழித்து, அத்துயரத்தில் வெற்றி சந்தோசத்தை கொண்டாடிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களிடம் கையேந்தும் நிலைமை தற்போது உருவாகியுள்ளமையை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
மேலும் இத்தகைய ஒருவருக்கு ஆதரவை வழங்குவதற்கு தமிழ் மக்களால் முடியுமா?
இதேவேளை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களது சொத்துக்களை பறித்தல் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை அழைத்து விசாரணைகளை நடத்துவது இன்னும் பெரும்பான்மையினந்தவரால் அரகேற்றப்பட்டே வருகின்றது.
ஆகையால் தமிழ் மக்கள் மஹிந்தவின் ஆட்சியை விரும்பவில்லை. இதனால் அம்மக்களின் குரல்களுக்கு ஏற்றவாறே எமது செயற்பாடுகள் நடைபெறும்” என சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.