சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்ட புதிய நெருக்கடி நிலை!
சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இலங்கைக்கு நீண்டகால வெளிநாட்டு அந்நிய செலாவணி கடன் வழங்குதல் தொடர்பான தரப்படுத்தலை B+ இல் இருந்து B நிலைமைக்கு குறைத்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமரை நியமித்ததுடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, கொள்கைகளில் காணப்படும் நிச்சயமற்ற நிலைமை, வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படாமை, வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள ஆபத்து போன்ற காரணங்களின் அடிப்படையில், இலங்கை கீழ் நிலைக்கு தரப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியில் இருந்து 2019 ஆம் ஆண்டு முதல், 2022 ஆமு் ஆண்டு வரையான காலத்தில் இலங்கை 20.9 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டும் என பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
மற்றுமொரு சர்வதேச கடன் தரப்படுத்த நிறுவனமான முடீஸ் நிறுவனம் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையை B1 நிலையில் இருந்து B2 வரை கீழ் இறக்கியது.
இந்த தரப்படுத்தல்கள் காரணமாக இலங்கை வெளிநாட்டு கடன்களை பெறும் போது அதற்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.