ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஐ.தே.மு.க்கு ஆதரவு!
எழுத்து மூல ஒப்பந்தங்கள் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்ணணிக்கு ஆதரவு வழங்கக் கூடாது என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தொிவித்த அவர்,
“கொழும்பில் நேற்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பின் பங்காளி கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்க கூடாது என கோரினோம். பேரினவாத கட்சிகள் தங்களின் தேவை முடிந்ததும் ஏமாற்றிவிடுவார்கள் என சுட்டிக்காட்டியிருந்தோம்.
நல்லாட்சி அரசால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகவில்லை, பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லை இந்நிலையே தொடர்ந்து காணப்படுகின்றது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் யுத்த குற்றம் தொடர்பிலான விசாரணை வேண்டும் என்பதில் எந்த சமரசத்திற்கும் நாம் போக மாட்டோம். எனவே ஒரு எழுத்து மூல ஒப்பந்தம் செய்தே ஆதரவு வழங்க வேண்டும்.
எழுத்து மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாத பட்சத்தில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக்கப்பட்டு ஒருவேளை நம்பிக்கையில்லா பிரேணனை கொண்டு வரப்பட்டால் அதற்கு ரெலோ ஆதரித்து வாக்களிக்காது. அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறியதாக அர்த்தம் இல்லை” எனத் தெரிவித்தார்.