மன்னார் மனிதப் புதைகுழி – இதுவரை 256 மனித எலும்புக்கூடுகள்!
மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று (புதன்கிழமை) 111ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணி கடந்த 12 ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டது.
பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும், மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.