யாழில் அம்பலமானது தெற்கு அரசியல் கட்சி ஒன்றின் ஏமாற்று வேலை!
எதற்காக பேருந்து நிலையம் வந்தோம் என்று தெரியாது எனவும் கொப்பி, புத்தகங்கள் தருவதாக கூறியே எங்களை அழைத்து வந்தார்கள் எனவும் யாழில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு- வவுணதீவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதற்காக இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை பொதுஜன பெரமுன கட்சியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்திற்காக பாடசாலை உபகரணங்கள் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி அழைத்து வந்தமை தொடர்பான மஹிந்த ராஜபக்ஸ கட்சியின் ஏமாற்று வேலை அம்பலமாகியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போதும், பொதுஜன பெரமுன கட்சி சார்ந்தவர்களும், சிறுவர்களும் அதிகளவில் பங்கு கொண்டிருந்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள் பங்கு கொண்டதை அடுத்து, அச் சிறுவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான காரணம் என்ன என வினாவிய போதே,
நாங்கள் எதற்காக பேருந்து நிலையம் வந்தோம் என்று தெரியாது என்றும், கொப்பி, புத்தகங்கள் தருவதாக கூறியே எங்களை அழைத்து வந்தார்கள் எனவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.