எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு!
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
றிஷாட் பதியுதீனை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார அண்மையில் வெளியிட்ட குரல் பதிவு தொடர்பில் இலங்கை மக்கள் சார்பில் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ரிஷாத் பதியுதீன் இன்றுகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ரிஷாட் பதியுதீன்,
“ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்த நாமல் குமார, பின்னர் அம்பாறை – மட்டக்களப்பில் வைத்து என்னையும் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் எமது கட்சியின் தவிசாளர், செயலாளர் உட்பட எம்.பிக்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டிருந்தனர்.
வடக்கில் நீண்டகாலமாக அரசியல் செய்பவனென்ற வகையிலும் அமைச்சரவை அமைச்சரென்ற வகையிலும், கட்சித் தலைவன் என்ற ரீதியிலும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டு இரண்டு பொலிஸாரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருக்கின்றார். இந்நிலையில், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும்” என கூறியுள்ளார்.