கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகரசபை!
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டுள்ளது.
தற்போது சீரற்ற காலநிலை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் மட்டக்களப்பு நகரம் மற்றும் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மஞ்சந்தொடுவாய் வரையில் உள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 12 இற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலத்தில் மாடு வளர்ப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை கவனத்தில் கொள்ளாமல் வீதிகளில் மாடுகளை விடுவதன் காரணமாக பல்வேறு விபத்துகள் இடம்பெறுகின்றன.
கட்டாக்காலி மாடுகளினால் அண்மைக்காலமாக விபத்துகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை பிடிக்கப்படும் மாடுகள், உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படும் என மாநகரசபை தெரிவித்துள்ளது.