காத்தான்குடி கடற்கரையோரத்தை ஆக்கிரமித்துள்ள வாவித் தாவரக் கழிவுகள்
மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையோரத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து கடலை நோக்கி அள்ளுண்டு சென்ற வாவித் தாவர கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பல கிலோமீற்றர்கள் பரப்பில் இந்த தாவரக் கழிவுகள் கடற்கரை நெடுகிலும் ஒதுங்கியுள்ளன.
சமீபத்தில் மட்டக்களப்பு முகத்துவாரம் திறக்கப்பட்டு பொங்கிப் பெருக்கெடுத்த வாவி வெள்ள நீர் கடலுக்குள் கரைபுரண்டோட வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாவித் தாவரங்களும் வாவி வெள்ள நீரோடு அள்ளுண்டு கடலுக்குள் சென்று, கடல் அலையால் கரைக்குக் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களும் கரையோர சமுதாய மக்களும் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டொரு தினங்களாக கரையொதுங்கிக் கொண்டிருக்கும் இந்த வாவித் தாவரங்களால் கடல் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, காத்தான்குடி கடற்கரையை தமது பொழுதுபோக்கிற்காகவும், உல்லாசத்திற்காகவும் பயன்படுத்த வருவோர் இந்த வாவித் தாவரங்களின் கரையோர ஆக்கிரமிப்பால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.a