புதைகுழியில் மீட்கப்பட்ட 266 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!
மன்னார் மனித புதை குழி அகழ்வுப் பணியானது 113 ஆவது நாளாக இன்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றுள்ள போது இது வரை 266 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மனித புதைகுழியில் இருந்து இது வரை 266 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 260 மனித எலும்புக்கூடுகள் அகற்றப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது முக்கிய தடயமாக கால் ஒன்று விலங்கிடப்பட்ட இரும்புக்கம்பியுடன் சேர்த்து கால் எலும்பு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் அணியும் மோதிரம் ஒன்றும் அகழ்வு பணியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள் எவ்வித தடையும் இன்றி இடம் பெற்று வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
இதே வேளை தொடர்ச்சியாக குறித்த அகழ்வுப்பணிகளின் போது சந்தேகத்திற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மற்றும் தடைய பொருட்களும் மீட்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.