யார் ஆட்சிக்கு வந்தாலும் அதனால் தமிழ் மக்களுக்கு பயனில்லை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ என அனைவரையும் நான் இனவாதிகளாகவே பார்க்கின்றேன்.
இந்நிலையில், இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு நலன் கிட்டாது என, ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் காங்கிரசின் மன்னார் மாவட்டக் காரியாலயம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த அலுவலக திறப்பு விழாவை தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு எதனை செய்துள்ளது? சமஷ்டியை தருகின்றோம் என்றார்கள், வடக்கு கிழக்கை இணைக்கின்றோம் என்றார்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றோம் என்றார்கள், காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தருகின்றோம் என்றார்கள் ஆனால் ஒன்றுமே நிறைவேறியதாக இல்லை.
அனைத்தும் ஊழல்களிலேயே நிறைவடைந்துள்ளது. இந்த நல்லாட்சி வந்து மூன்று வருடங்களில் மத்திய வங்கியில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.