இரணைமடுவை மகாவலியுடன் இணைக்க அரசியல் சூழ்ச்சி!
மாகாண அரசுக்கு சொந்தமான இரணைமடு குளத்தை மத்திய அரசாங்கம் முற்றாக கைப்பற்றிக்கொள்ளும் சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டினார்.
யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கின்றோம் என்ற பெயரில் இரணைமடுவை மகாவலியுடன் இணைத்து, மகாவலி அதிகார சபைக்கு சொந்தமாக்கி, ஏற்கனவே கொக்குளாய், நாயாறில் நடந்ததைப் போன்ற குடியேற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி – இரணைமடு குளம் புனரமைக்கப்பட்டு, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த ஐங்கரநேசன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் தற்போது ஆளுநர் ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், சமூகத்திற்கும் பண்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு என்று கருதி நிராகரித்த திட்டங்கள் பல இன்று வணிக நோக்கம் கருதி அங்கீகரிக்கப்படுவதாகவும் ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.
அந்தவகையில், இரணைமடு குளத்தை அவசர அவசரமாக திறந்துவைத்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும், அதனை மத்திக்கு சொந்தமாக்க முயற்சிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு மாகாணங்களுக்கு இடையில் நீர் பங்கிடப்படுகின்றபோது, அதனை ஆளும் பொறுப்பை மாகாண சபைக்கு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும், தற்போதைய அரசியலமைப்பில் அவ்வாறு இல்லை.
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளால் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், ஆளுநர் ஆட்சியின் கீழ் பாதகமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதென சுட்டிக்காட்டிய ஐங்கரநேசன், அதனை கருத்திற்கொண்டு விழிப்பாக செயற்படுவது அவசியமென கூறினார்.