மு.க.ஸ்டாலினுக்கும் சோனியா காந்திக்கும் இடையில் விசேட சந்திப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று புது டெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மேகதாது அணை விவகாரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஸ்டாலின், சோனியா காந்தியிடம் கையளித்துள்ளார்
அத்துடன், சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இவ்வாழ்த்துச் செய்தியில் செந்தமிழ் மொழியை செம்மொழி எனப் பிரகடனப்படுத்துவதற்கு வலிமையான அடித்தளம் அமைத்தவர் சோனியா காந்தியென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காவிரியின் குறுக்கே, கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து சோனியாவிடமும், ராகுல் காந்தியிடமும், ஸ்டாலின் எடுத்து கூறியுள்ளார்.
அந்தவகையில் தமிழகத்தில், காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தொடர்வது குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மத்தியில் பா.ஜ.க அரசுக்கு எதிராக பலம் பொருந்திய கூட்டணியை அமைத்து போராட வேண்டிய தன்மை குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
இச்சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்கள் அவை கனிமொழி, தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன், நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.