விரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான, கனடாவின் உறவு விரக்தியின் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பில் சீனாவுடனான நலன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஹுவாவே விவகாரத்தில் தலையிட தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார்.
ஹுவாவே அதிகாரியின் கைது கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையிலேயே அமெரிக்க தரப்பில் இவ்வாறானதொரு கருத்து வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கனடா, அமெரிக்க நிர்வாகத்துடன் அதிகாரபூர்வமாக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) வொஷிங்டனுக்கு விஜயம் செய்யும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட்டிற்கு இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்த தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை விற்பனை செய்ததாக ஹூவாவி தொலைதொடர்பு நிறுவன தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou, கனடாவின் வாங்கூரில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், கனடா அவரை விடுவித்து தமது நாட்டிடம் ஒப்படைக்க வேண்டுமென சீனா வலியுறுத்தி வருகின்றது.
சீனாவின் ஹூவாவே நிறுவன நிறுவுனரின் மகளான Meng Wanzhou மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 30 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அவரை அமெரிக்காவிற்கு அனுப்பும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படடு வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு இடம்பெற்றால் கனடா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமென சீனா எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.