ஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்!

ஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்!

பிரான்ஸின் – ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்ட்மஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரை கொலை செய்த செரிஃப் செகாட் என்ற நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், சிறையில் இருந்தபோது தீவிர இஸ்லாமிய வாதியாக செயற்பட்டு வந்துள்ளார்.

சந்தேகநபர் மறைந்திருந்ததாக கருதப்படும் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி உள்துறை அமைச்சர் கிறிஸ்டோபே காஸ்டனர் தெரிவிக்கையில், மூன்று பொலிஸ் அதிகாரிகள் ஸ்ட்ராஸ்பர்க் பகுதியில் உள்ள நியுடோஃவ் – ரூ டூ லஸார்ட் பிரதேசத்தில் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போதே சந்தேகநபரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது. குறித்த நபர் தப்பிக்க முயற்சித்ததுடன், பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போது பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் இந்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

துப்பாக்கிதாரியை தேடும் முயற்சியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் தொடக்கம் பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் நேற்று இரவு வரை அது சாத்தியமாகவில்லை.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய செகாட்டின் உறவினர்கள் 5 ​பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் செகாட்டின் பெற்றோர் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் உள்ளடங்குகின்றனர்.

Copyright © 7206 Mukadu · All rights reserved · designed by Speed IT net