ஐ.தே.க. பெரும்பான்மையை இழக்கும்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணைக்கு அடிபணிய மறுத்தால், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தை இயக்கும் கருவி கூட்டமைப்பின் கைகளிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகல் ஆவணத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து விஜேராம மாவத்தை அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”நாடாளுமன்றத்தில் வெறும் 103 ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை, கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்துள்ளது.
இவ்வாறானதொரு தருணத்தில் கூட்டமைப்பின் கோரரிக்கைகளுக்கு ஐ.தே.க. மறுப்பு தெரிவிக்குமாயின். நாடாளுமன்றத்தில் ஐ.தே.க. பெரும்பான்மையை இழக்க நேரிடும்.
ஐக்கிய தேசிய கட்சியே நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளியது. கடந்த மூன்றரை வருட காலத்தில் ஐ.தே.க. 20.7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஐ.தே.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில் இன்னும் எவ்வளவு தொகை கடனை பெறவுள்ளது என்பது தெரியவில்லை.
நாம் நாட்டின் அபிவிருத்திக்காகவே கடன் பெற்றிருந்ததுடன், அந்த அபிவிருத்திகள் அனைவருக்கும் புலப்படும் வகையில் காணப்படுகிறது. ஆனால், ஐ.தே.க. பெற்ற கடன்கள் தேவையற்ற செய்பாடுகளுக்காகும்” எனத் தெரிவித்தார்.