கூட்டமைப்பின் ஆதிக்கத்தை தடுக்க ஜனாதிபதியின் திட்டம்!

கூட்டமைப்பின் ஆதிக்கத்தை தடுக்க ஜனாதிபதியின் திட்டம்!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டு வைத்துக் கொள்ளாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது கூறியிருந்தார்.

எனினும், தனிநபர்களாக, புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்பவர்களை தடுக்கமாட்டேன் என்றும், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி தமது பிரதிநிதிகளால் தம்மை புதிய அரசாங்கத்தில் வைத்திருக்க விரும்பினால் அவ்வாறு செயற்படத் தாம் தயாராக இருப்பதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியும் என்றும், கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு நல்லதல்ல என்றும் தயாசிறி ஜெயசேகர கூறினார்.

எனவே, உறுதியான நிலையைப் பேணுவதற்காக, ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக, ஆதரவளிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கக் கூடும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இயங்குவதை விரும்பாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கொண்டு, கூட்டமைப்பின் ஆதிக்கத்தை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை இணைத்து முக்கிய அமைச்சுப் பதவிகள் சிலவற்றை வழங்க மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Copyright © 8327 Mukadu · All rights reserved · designed by Speed IT net