ராஜஸ்தானில் மீண்டும் முதல்வரானார் அஷோக் கெலாட்!
ராஜஸ்தானில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சி, அம்மாநில ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அஷோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியாகிய பின்னரே முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சி 199 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ.கவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில் மாநில முதல்வராக யாரை நியமிப்பது என்ற கேள்வி தொடர்சியாக நிலவிவந்த நிலையில் அதற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) பதில் கிடைத்துள்ளது.
இதற்கு தீர்வு காண காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் நேற்று டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நியமிப்பதாக அறிவித்தனர்.
மேலும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டை தெரிவு செய்து காங்கிரஸ் உயர் பீடம் அறிவித்தது.
இதன் மூலம் முதல்வர் குறித்து கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையில் நிலவிய போட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீர்வை வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து முதல்வராக தெரிவான அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேற்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
இந்நிலையில், டிசம்பர் 17 ஆம் திகதி ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளார்.
மேலும், மூன்றாவது முறையாக தன்னை முதல்வராக தெரிவு செய்த கட்சியின் உயர் பீடத்துக்கு அஷோக் கெலாட் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என சச்சின் பைலட் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.