அமைச்சர்கள் குறித்து நானே தீர்மானிப்பேன்!
அமைச்சர்கள் குறித்து நானே தீர்மானிப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், இன்று அல்லது நாளை அமைச்சரவை நியமிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காரசாரமான சில விடயங்களை கூறியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் ஐம்பது நாட்களுக்கு மேலாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னதாக ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அமைச்சர்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையளித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்நிலையிலேயே அமைச்சர்கள் குறித்து நானே தீர்மானிப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன்.