கருணாநிதியின் சிலை இன்று திறப்பு விழா!
அண்ணா அறிவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கவுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு பயணிக்கவுள்ளனர்.
அந்தவகையில் கருணாநிதியின் சிலையுடன் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையையும் திறந்துவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இச்சிலை திறப்புவிழா மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளமையால் அப்பகுதி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாதுகாப்பு மற்றும் சனநெரிசலை கருத்திற்கொண்டு முக்கிய பிரமுகர்களுக்கு மாத்திரம் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.
கருணாநிதியின் 9 அடி உயரமான முழு உருவ வெண்கல சிலையை தீனதயாளன் என்ற சிற்பி வடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.