ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்!
ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபே குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் பதவி விலகல் மற்றும், ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்றபின் பின்னர், மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் இன்று (திங்கட்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஊடகவியலாளர்கள் எல்லோரும் தற்போது வேறு ஒரு தாக்குதலைச் சந்திக்க தயாராகுங்கள். நீங்கள் கடந்த காலங்களில் கண்களால் கண்டதையும், கேட்டதையும் அப்படியே எழுதினீர்கள். நீங்கள் எழுதியதை நாடு அறிந்து கொண்டது.
ஆனால் நீங்கள் இப்பொழுது ஒவ்வொரு அமைச்சர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளீர்கள்.
இலத்திரனியல் ஊடகம் இந்த அமைச்சருக்கு, இந்த ஊடகம் இவருக்கு என ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் உங்களுக்காக தனித்தனியே அமைச்சுக்கள் இருக்கின்றன. ஒரு நிறுவனத்திற்கு ஒரு அமைச்சர் பொறுப்புக் கூற இருக்கிறார்.
இங்கு இருக்கின்ற அனைத்து ஊடங்களும் ஒவ்வொருவரினால் கண்காணிக்கப்படுகின்றன.
அவர்களின் செயற்பாடுகளுக்கு அமையவே, உங்கள் தரவுகள் சேகரிக்கப்பட்டு உங்களுக்கும் அழைப்பாணைகள் வந்து சேரும்.
நீங்களும் சிறு, சிறு பிழைகள் செய்திருப்பீர்கள் தானே. பயப்படவேண்டாம். நாம் உங்களுக்காக குரல் கொடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.