ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த மு.க.ஸ்டாலின்!
சென்னையில் நேற்று (ஞாயிற்றக்கிழமை) நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் உரையாற்றிய, மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழிந்ததுடன் அதனை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து, தேசிய அளவில் அரசியல் மேடைகளில் விவாதத்தை ஏற்படுத்தியள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கலைஞர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்,
“என் வாழ்வில் இன்று மறக்கமுடியாத நாள். இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரிப்புடன் இருக்கிறேன்.
இந்த வேளையில் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள். நீங்கள் எங்கும் போகவில்லை. லட்சக்கணக்கான மக்கள் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளீர்கள்.
வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.
தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை பிரதமர் மோடி பார்க்க வரவில்லை.
தமிழகம் என்றால் அவ்வளவு அலட்சியமா எனவே அவரை வீழ்த்துவதற்கு 21 கட்சிகள் இணைந்திருக்கின்றன.
இந்தநிலையில், ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக” எனக் கூறியுள்ளார்.