தேசிய வளங்களை மஹிந்த விற்பனை செய்தமைக்கு சங்ரிலாவே சாட்சி!
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரே என்பதற்கு காலி முகத்திடலில் அமைந்துள்ள சங்ரிலா ஹோட்டலே சாட்சியாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கான நீதிக்கான போராட்டம் நேற்று (திங்கட்கிழமை) காலி முகத்திடலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
“தேசிய அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்று அந்நியர்களிடம் அடிமையாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக பொய்யான குற்றச்சாட்டை மஹிந்த தரப்பினர் பரப்பி வருகின்றனர்.
ஆனால் மஹிந்தவின் ஆட்சிகாலத்தில் தான் அரச காணிகளை குடும்ப தேவைக்காக விற்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
அதாவது இராணுவ தலைமையகத்துக்கு சொந்தமான காணிகளை கூட குடும்ப நலனுக்காக தாரைவார்த்தவர் மஹிந்த ராஜபக்ஷவே ஆவார். நாம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.
மேலும் மஹிந்தவினால் ஐ.தே.க.வுக்கு நிகராக இனி ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது. மக்களை ஏமாற்றுவதற்காகவே அவர் பிரதமராக பதவியேற்றபின்னர் பொருட்களின் விலை மற்றும் பெற்றோலின் விலையை குறைத்தார். ஆனால் அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.
அந்தவகையில் நாம் பல போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளோம்.
ஆகவே இவ்வாட்சியை சிறந்த முறையில் நடத்துவதற்கு அனைவரும் உதவ வேண்டும் என்பதுடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.