மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினரா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகவே மஹிந்த ராஜபக்ச செயற்பட்டு வந்தார்.
எனினும், கட்சி உறுப்புரிமையை கைவிட்டு வேறு ஓர் கட்சியில் இணைந்து கொண்டால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை உடனடியாக ரத்தாகும் என்பது அரசியல் சாசனத்தில் தெளிவாக விதந்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதற்கு முன்னதாக மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேர்தல் ஆணையாளரை நாடாளுமன்றிற்கு அழைத்து அவரிடம் இது குறித்து விளக்கம் கோர வேண்டும்.
மஹிந்த ராஜபக்சவிற்கு அவர் அருகில் இருப்பவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் பிழையான ஆலோசனை வழங்கி அவரை நெருக்கடியில் சிக்க வைத்து வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்சவுடன் எனக்கு தனிப்பட்ட குரோதம் கிடையாது எனினும், அரசியல் அமைப்பின் பிரகாரம் அனைத்து விடயங்களும் நடைபெற வேண்டும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.