யாழில் இராணுவ வீரர்கள் அடங்கிய குழு தமிழரொருவரை கடத்த முயற்சி!

யாழில் இராணுவ வீரர்கள் அடங்கிய குழு தமிழரொருவரை கடத்த முயற்சி! 

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தரொருவரை கடத்திய நால்வர் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நைய புடைக்கப்பட்டு பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கினை சேர்ந்த சி.நமசிவாயம் (வயது 60) என்பவரையே இன்று கடத்த முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனம் ஒன்றில் வந்த 7 பேர் கொண்ட குழுவே குடும்பஸ்தரை கடத்த முற்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் குழுவினரை சுமார் 10 கிலோமீற்றர் தூரம் துரத்தி சென்று இயக்கச்சி வளைவு பகுதியில் வைத்து மடக்கி பிடித்து நைய புடைத்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, குழுவினரால் கடத்தப்பட்டவர் தமக்கு பல லட்சம் ரூபா பணம் கொடுக்க வேண்டும் எனவும், அதனாலேயே அவரை தாம் கடத்தியதாகவும் கடத்தல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த கடத்தல் குழுவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் இயக்கச்சி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து வந்த நபரொருவரே இராணுவ வீரர்களை அழைத்து சென்று குடும்பஸ்தரை கடத்தியுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது இரு இராணுவ வீரர்களுடன் மேலும் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் இருந்து தப்பி சென்ற மூவரையும் தேடுவதற்கு பொதுமக்களின் உதவிகளை பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net