அல் அய்ன் அணியிடம் ரிவர் பிளேட் அணி அதிர்ச்சி தோல்வி!
பீபா கழகங்களுக்கிடையிலான உலகக்கிண்ண தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
ஏழு முன்னணி கழக அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் நேற்று அரையிறுதிப் போட்டியொன்று நடைபெற்றது. இதன் முடிவினை தற்போது பார்க்கலாம்.
இந்த அரையிறுதிப் போட்டியில், ரிவர் பிளேட் மற்றும் அல் அய்ன் அணிகள் மோதிக்கொண்டன.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முன்னணி கழக அணியான ரிவர் பிளேட் அணி, அல் அய்ன் அணியிடம், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-5 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.
ஹாஸா பின் ஸெயிட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்.
இதில் முற்பாதியில் அல் அய்ன் அணியின் வீரரான மார்க்கஸ் பெர்க் 3ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதன்பிறகு ரிவர் பிளேட் அணியின் வீரரான ரபேல் சாண்டோஸ் போரே 11ஆவது மற்றும் 16ஆவது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து முற்பாதியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி நேரத்தில் அல் அய்ன் அணியின் வீரர்கள், சிறப்பாக விளையாடினர்.
அணியின் வீரரான கயோ லூகாஸ் பெர்னாண்டஸ் 51ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க கோல் கணக்கு 2-2 என சமநிலைப் பெற்றது.
மேற்கொண்டு இரு அணி வீரர்களால் முயற்சித்தும், வெற்றி கோலை புகுத்த முடியவில்லை.
அரையிறுதிப் போட்டி என்பதால் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் போட்டி நடுவர் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளரை தீர்மானிக்க அவர் முடிவு செய்தார்.
இதற்கமைய பெனால்டி ஷூட் அவுட் முறை நடைபெற்றது. இதில் 5-4 என்ற கோல்கள் கணக்கில் அல் அய்ன் அணி, வெற்றி பெற்றது.