இராணுவத்தினர் எவரும் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபடவில்லை!
இராணுவத்தினர் எவரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்,
“யுத்தகாலத்தில் இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு பக்கத்திலும் தவறுகள் இடம்பெற்றன.
தற்போதும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழ்கின்றனர்.
அவ்வாறிருக்கையில் இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்துவது ஏற்கப்பட முடியாததாகும்.
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவ வீரர்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
அத்துடன், இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் இராணுவத்தினர் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபடவில்லை என்றே கூறிவந்தனர்.
எனினும், ஜனாதிபதி தெரிவித்த இந்த கருத்தின் ஊடாக இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற மறைமுகமான பொருள் வெளிப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.