கணவருடன் வந்த வெளிநாட்டு பெண் யாழில் தூக்கிட்டு தற்கொலை!
வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ். கொட்டடிப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புடவை வியாபாரத்தின் நிமித்தம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தனது கணவருடன் வருகை தந்திருந்த இந்திய பெண்ணே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஒரு மாதகாலமாக கொட்டடி நமசிவாயம் பாடசாலைக்கு அருகாமையில் தனது கணவருடன் தங்கியிருந்த போது, அந்த பெண் வயிற்று வலி என அடிக்கடி கூறியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று இரவு நித்திரைக்குப் போன பின்னர், காலையில் எழுந்து பார்த்த போது மனைவி தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாக கணவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.