கனடா ஆசை காட்டி பல இளைஞர்களை ஏமாற்றிய இந்தப் பெண் யார்? பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
கனடாவில் தொழில் பெற்று தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்ளை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர்.
குறித்த பெண் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
இந்த பெண் நாட்டில் தெரிவு செய்யப்படும் பிரதேசங்களுக்கு சென்று அங்கு வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொள்கின்றார்.
அங்கு தான் வசதியான பெண் எனவும், பாதுகாப்பு கருதி வாடகை வீட்டில் தங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் கனடாவில் வசிப்பதாகவும் யாரெனும் கனடா செல்ல ஆசையிருந்தால் அனுப்பி வைப்பதாகவும் அந்தப் பகுதி மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார்.
அதற்கமைய குறித்த பெண் தங்கியிருக்கும் வீடுகளில் சுமுகமான உறவு ஒன்றை ஏற்படுத்தி கொண்டு மோசடியில் ஈடுபடுகிறார். கனடா அனுப்புவதற்காக முதலில் 5 லட்சம் ரூபா வழங்குமாறு கோருகின்றார்.
அதற்கமைய வழங்க வேண்டிய பணத்தை அனுப்புவதற்கு, கனடா செல்ல வேண்டியவர்கள் தங்கள் பெயரில் வங்கி கணக்கு ஒன்றை திறக்க வேண்டும்.
அதில் பணத்தை வைப்பு செய்துவிட்டு அதற்கான புத்தகம், ஏரிஎம் அட்டை, அதற்கான கடவு சொல் அனைத்தையும் அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் ஊடாக அவர் அந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த வீடுகளில் இருந்து தப்பிச் சென்று விடுகின்றார்.
இந்த பெண்ணுடன், சிங்கள சினிமா நடிகரும் தொடர்புப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நடிகரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் கனேடிய விசா பெறுவதற்கு 14 ஆம் திகதி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். விசா பெறுவதற்கான நேர்முக தேர்விற்கு செல்லும் போது அவர்களால் மோசடி செய்யும் நடவடிக்கை வெளியாகியுள்ளது.
அதற்கமைய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், 50 ஆயிரம் ரூபாய் பணம், 72 கடவுச்சீட்டுக்கள், 50 வங்கி வைப்பு புத்தகங்கள், 50 ஏ.டி.எம் அட்டைகள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.