நானும் பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு வழியில்லை; கதறும் முன்னாள் போராளியின் மனைவி!
தனது கணவரை விடுவிக்காத பட்சத்தில் தானும் தனது ஐந்து பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு வழியில்லை என அஜந்தனின் மனைவி தெரிவித்துள்ளார்.
வவுணதீவுப்பகுதியில் போலீசாரை சுட்டுக் கொன்றது யார் எண்டு அடையாளம் காட்டும் படி தனது கணவரை தடுத்து வைத்திருப்பது நீதிக்கு முரணான செயலாகும் அஜந்தனின் மனைவி தெரிவித்துள்ளார்.
தனது கணவருக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது கொலை செய்தது யார் என்று எனது கணவரால் எவ்வாறு அடையாளம் காட்ட முடியும் அவ்வாறு காட்டுவது எனில் வீதியில் செல்லும் யாரையேனும் பிடித்து தான் காட்ட வேண்டும்.
அத்தோடு எனது கணவருக்காக நீதி கோரி சுதந்திரமாக போராட்டம் செய்ய கூட முடியவில்லை.
இரவு நான் எனது பிள்ளைகளுடன் உணவுத் தவிர்ப்பு போராட்டம் செய்துகொண்டு இருக்கையில் காந்தி பூங்காவிற்கு வந்த அதிகளவான போலீசார் மற்றும் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் எனது போராட்டத்தினை வலுக்கட்டாயமாக இடைநிறுத்தி என்னையும் பிள்ளைகளையும் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.
உடனடியாக எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய போலீசார் மற்றும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் நானும் எனது பிள்ளைகளும் நஞ்சருந்தி இறந்து விடுவதை தவிர வேறு வழியில்லை எனது கணவரின் உழைப்பு மூலமே எனது பிள்ளைகளின் மற்றும் எனது வாழ்க்கையும் தங்கியுள்ளது.
கொலை செய்தது யார் என்று போலீசார் தான் கண்டு பிடிக்க வேண்டுமேயொழிய எனது கணவரால் எப்படி கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க முடியும் எனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.