மஹிந்தவிற்கு நேர்ந்த கதியே மைத்திரிக்கும் ஏற்படும்!
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்ற போலி வாக்குறுதி தொடருமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நேர்ந்த கதியே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் நேரும் என, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
”ஐ.தே.க. ஐ.ம.சு.கூ ஆகிய இரு தரப்பும் மோசடியாளர்கள். இவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்க முடியாது. எனவே, தேர்தலுக்கு செல்லவேணடும்.
மைத்திரி – மஹிந்த ஆகிய இருவரது செயற்பாடுகளும் சமமானது. மைத்திரியின் செயற்பாடு அவரது தனிப்பட்ட நோக்கம் கொண்டது. மக்கள் நலன் சார்ந்ததல்ல.
ஜே.ஆருக்கு பின்னர் வந்த அரசாங்கங்கள் பல வாக்குறுதிகளை கொடுத்தன. ஏதாவது நிறைவேறியதா? 26 வருடங்களாக முஸ்லழிம் கேட்ட விடயங்கள் செய்யவில்லை.
முஸ்லிம் சிங்கள மக்கள் விரும்பாத நிலையில் முன்னர் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. இவ்வாறு நிறைவேற்று அதிகாரம் பிழையாக பயன்படுத்தப்பட்டது.
பிரதமர் பிறருக்கு செவிசாய்க்க வேண்டும். பிரதமர் பதவியில் உள்ளவர் செருக்கினை குறைக்க வேண்டும். அவ்வாறான ஒருவரை நியமிக்க வேண்டும்.
ராஜபக்ஷவுடன் மறைகின்ற நிலையில் சுதந்திரக் கட்சி காணப்படுகிறது. இனவாதம் கோத்திரவாதம் மிகுந்த, அரசியல் அராஜகம் மேலோங்கியுள்ளது.
எனவே நாட்டுக்கு மாத்திரமல்ல, கட்சிக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது முக்கியமானது” எனத் தெரிவித்தார்.