எதிர்க்கட்சி தலைவர் யார்?- இன்று இறுதி தீர்மானம்!
பிரதான எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது குறித்த இறுதி தீர்மானம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் குறித்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிப்பார் என தொிவிக்கப்படுகிறது.
புதிய எதிர்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை அங்கீகரிப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தன.
அதன்படி இக்கோரிக்கை குறித்து ஆராய்வதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அதற்கமைய, எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு சபாநாயகர் இன்று முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாத காலத்திற்கான வரவு-செலவு திட்ட இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இடைக்கால கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.