புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இன்று தீர்மானம்!
தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி குறித்த யோசனை, இன்று (வெள்ளிக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளதாக பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற நீதியின் குரல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணி தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த கூட்டணியில், ஐக்கிய தேசிய கட்சியுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கவுள்ளன.
அதேவேளை இவ்விடயம் தவிர, இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளன.