மஹிந்த தரப்பின் மிரட்டலுக்கு அஞ்சி தேர்தல் நடத்தப்படாது!
ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் பொதுத் தேர்தலுக்குச் செல்ல நாம் தயாராகவிருக்கின்ற போதிலும், மஹிந்த தரப்பினரின் மிரட்டலுக்கு அஞ்சி ஒருபோதும் தேர்தலை நடத்தப் போவதில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
மேலும், அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடனேயே தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
10 வருடங்களாக ஜனாதிபதியாக முழுமையான அதிகாரத்தை கொண்டிருந்தபோது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத மஹிந்த, தற்போது மக்களின் பிரச்சினை குறித்து பேசுவது ஆச்சரியமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியில் இருக்கும் போது மக்களின் வாழ்க்கை சுமையை உயர்த்தி, வர்த்தகர்களுக்கு சலுகைகளை வழங்கியவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்தவுடன் மக்கள் நலன் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர் எனவும் விமர்சித்தார்.
இதேவேளை, இவர்களின் அதிகார ஆசை காரணமாக கடந்த 51 நாட்களில் சுற்றுலாத்துறை, சர்வதேச முதலீடுகள் என முழு நாடும் பெரும் பாதிப்பிற்குள்ளானது என்றும் சுட்டிக்காட்டினார்.