ரணிலுக்கு பூரண ஆதரவு தெரிவித்த மஹிந்த!
பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை நேற்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இதன்போது அடுத்தாண்டுக்கான முதல் மூன்று மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விவாதம் குறுகிய காலப்பகுதியில் நடத்தப்படும் என ஆளுதம் தரப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று சமர்ப்பிக்கப்படும் இடைக்கால கணக்கறிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக மஹிந்த அறிவித்துள்ளார்.
நாட்டில் நீடிக்கும் நிலைமையை கருத்திற் கொண்டு இடைக்கால கணக்கறிக்கையின் அங்கீகாரத்திற்கு இடமளிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தடுப்பது அவசியம். இதன் காரணமாக இடைக்கால கணக்கறிக்கையை ஆட்சேபிக்க கூடாது.
சமகால அரசாங்கம் அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கும் நிதி ஒதுக்கீட்டு பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக மஹிந்த மேலும் குறிப்பிட்டார்.
கடந்த இரு மாத காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு மஹிந்த ஆதரவு தெரிவிப்பது குறித்து அவரின் பங்காளிகள் அதிருப்தி அடைந்தள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.