மைத்திரி அரசியல் அமைப்பை மீறிவிட்டார்! உடன் தேர்தலை நடத்த வேண்டும்!
ஜனாதிபதி அரசியலமைப்பு மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எந்தவொரு தேர்தல் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தாலும் புதிய ஜனாதிபதி ஒருவர் தேவை என்பதனை உணர வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள சிக்கலான நிலமையில் இருந்து மீள நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என மீண்டும் ஒரு முறை அழுத்தமாக குமார வெல்கம கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்யும் எந்தவொரு கூட்டத்திலும் இனி கலந்துகொள்ளப் போவதில்லை.
அதன்படி ஜனாதிபதி தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.
இதற்கு பிறகு ஜனாதிபதியுடன் நடைபெறும் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளாது புறக்கணிக்கப் போகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.