அரியானாவில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு!
அரியானா மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அரியானா மாநிலம் ரோஹ்தக்-ரேவரி நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் பயணித்த வாகனங்கள் விபத்தில் சிக்கியதை அறியாமலும், வேகத்தை கட்டுபடுத்த முடியாமலும் பின்னால் பயணித்த 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமான முறையில் இருப்பதால், அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துக்காரணமாக உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.
மேலும், குறித்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு ஏராளமான ஜே.சி.பி வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் வழக்கத்தை விட தற்போது கடும் குளிர் நிலவி வருகின்றது. கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி 3.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
அதனைவிட குறைவாக நேற்று 3.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த வெப்பநிலையானது 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதேவேளை, பகல் நேரத்திலும் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால், விபத்தை தவிர்ப்பதற்காக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.