சுதந்திர கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் நான்!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தான் பெற்றுக்கொண்டதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு பறம்பானதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை அட்டையை ஏற்றுக்கொண்டதாக வெளியாகிய படம் தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,
“அது உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொள்வது தொடர்பான படம் அல்ல. பொதுஜன முண்ணனியில் இணைந்துகொள்ளும் போது எடுக்கப்பட்ட படம். அந்த அட்டையில் எனது பெயர் அச்சிடப்படவில்லை என்பதால் நான் வைத்திருக்கும் ஆவணம் உறுப்பினர் அட்டை அல்ல.
உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தல் மற்றும் உறுப்புரிமை வழங்குதல் என்பன இருவேறு விடயங்களாகும். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். கட்சியின் மூத்த ஆலோசகராக இருக்கிறேன்.
மூத்த ஆலோசகர்கள் பக்கம் மாறமாட்டார்கள். அவர்களுக்கு ஓய்வு இல்லை.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.