அரசாங்கம் அமைச்சுகள் விடயத்தில் அரசியலமைப்பை மீறுகிறது!
அமைச்சுகளை, அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் அரசியலமைப்புக்கு முரணாக அரசாங்கம் செயற்பட முனைகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இல்லாதமையால் அமைச்சுகளின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டுமென 19ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப கடந்த காலத்தைப்போன்று அமைச்சு பதவிகளை உருவாக்க முடியாது. அவர்களுக்கு தற்போது அமைச்சு பதவிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஆகையால் அமைச்சர்களின் எண்ணிக்கை 30யை விட கூடுமாக இருந்தால் முறையான எதிர்கட்சி என்ற ரீதியில் நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கத்துக்கு தடைகளை ஏற்படுத்துவோம்” என ரோஹித அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.