எளிமையாக வாழுங்கள்!
மக்கள் அனைவரையும் எளிமையாக வாழுமாறு இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் தினத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இயேசு கிறிஸ்து வறுமையில் பிறந்தவர் என்பதை சுட்டிக்காட்டிய பாப்பரசர், செல்வந்தர்களுக்கும், வறியவர்களுக்கும் இடையில் இடைவெளி நிலவுகின்றமைக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார்.
வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் நத்தார் சிறப்பு வழிபாட்டின்போதே பாப்பரசர் இதனை குறிப்பிட்டார்.
82 வயதான பாப்பரசர், ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர் என்ற வகையில் இம்முறை ஆறாவது முறையாக கிறிஸ்மஸ் சிறப்பு வழிபாடுகளை தலைமை தாங்கி நடத்தினார்.
பாப்பரசர் தலைமையில் நடைபெற்ற பாரம்பரிய நத்தார் வழிபாட்டில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள்வரை கலந்துக் கொண்டனர்.
சிறப்பு வழிபாட்டில் மக்களுக்கு நற்சிந்தனைகளை வெளிப்படுத்தி பிரான்சிஸ், ”இயேசு கிறிஸ்து அழிப்பதற்கும், பதுக்கி வைப்பதற்குமான வழியை எவருக்கும் காட்டியதில்லை. மாறாக பகிர்ந்துக் கொள்ளவே அவர் கூறியுள்ளார். எனவே அவரது பாதையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
மனிதர்கள் தற்போது பேராசை கொண்டவர்களாக மாறியுள்ளனர். சிலர் தேவைக்கு அதிகமாக அனைத்தையும் கொண்டு, ஆட்பர உணவு வேளையை உட்கொள்ளும் சந்தர்ப்பத்தில், மறுபுறத்தில் ஒருவேளைக்கான உணவுகூட கிடைக்காது தவித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.