ஜனாதிபதியின் முடிவால் சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு!
பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜனாதிபதியின் கருத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.
எனினும், சுதந்திரக் கட்சி தனித்துவமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில் ஒருசாரார் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், இக்கூட்டத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஐ.தே.க. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, அவ்வாறானவர்கள் கட்சியிலிருந்து விலகிச் சென்று ஆதரவளிக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.