மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து ரஹானே- லாங்கர் கருத்து!
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாளுக்கு நாள் இரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இந்நிலையில் இரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், தொடரின் வெற்றியை தக்கவைக்கும் வகையிலும், இரு அணிகளும் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளன.
இதற்கிடையில் மெல்பேர்னில் நாளை ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக, இரு அணி வீரர்களும் மெல்பேர்ன் மைதானத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இப்போட்டி குறித்து, இந்தியக் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரான அஜிங்கிய ரஹானே கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறிய கருத்துக்கள் இவை,
“துடுப்பாட்ட வீரர்கள் நிச்சயம் மேம்படுத்த வேண்டும், இதில் இருவேறு கருத்துகள் கிடையாது. துடுப்பாட்டம் பற்றி விவாதிக்கும் போது இது மிகவும் முக்கியமான ஒரு புள்ளியாகும்.
குறிப்பாக வெளிநாடுகளில் பந்து வீச்சாளர்கள் எதிரணியினரின் 20 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துகின்றனர். ஆகவே பந்து வீச்சாளர்களுக்கு எங்கள் தரப்பிலிருந்து உதவி கிடைத்தால் முடிவுகள் நமக்குச் சாதகமாக இருக்கும்.
பொக்சிங் டே டெஸ்ட் போட்டி, மெல்பேர்ன் மைதானம், மிகப்பெரிய இரசிகர்கள் கூட்டம், நான் உண்மையில் ஆர்வமாக இருக்கிறேன். 1-1 என்று இங்கு வந்துள்ளோம், ஆனால் பெர்த்தில் அவுஸ்ரேலிய அணி நிச்சயம் மீண்டு எழும் என்பது எங்களுக்குத் தெரிந்தே இருந்தது.
பெர்த்தில் நமக்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் அது முடிந்த கதை, எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில்தான் கவனம். ஒவ்வொரு செஷனிலும் சிறந்தவற்றை அளிக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முக்கியம்.
ஒரு செஷனில் போட்டி மாறிவிடும் என்பதால் நாம் 100 சதவீதத்திற்க்கும் அதிகமாக களத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டும். வரும் டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் இன்னும் கூடுதல் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை மெல்பேர்னில் சதம் எடுப்பேன் என்று நினைக்கிறேன், ஏனெனில் அடிலெய்ட், பெர்த் டெஸ்ட் போட்டிகளில் நான் துடுப்பெடுத்தாடிய விதத்தைப் பார்க்கும் போது நிச்சயம் சதம் வரவேண்டும்.
நான் 2 சதங்கள் எடுப்பேன், ஆனால் பொதுவாக அவற்றைப் பற்றி சிந்திக்காமல் விளையாட வேண்டும். சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அணிக்காக விளையாடினால் போதும். சொந்த மைல்கல்கள் பின்னால் வரும்” என கூறினார்.
ரஹானேவை தொடர்ந்து, அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறிய கருத்துக்கள் இவை,
“அடுத்தபடியாக இலங்கை அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இவை முடிவதற்கும் ஸ்மித், வோர்னர் தடை முடிவடைவதற்கும் சரியாக இருக்கும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது.
ஆம்! அந்தத் தொடருக்கு இருவரும் வர வலுவான வாய்ப்புள்ளது. ஆம் அது நிச்சயம் பரிசீலனையில் உள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட்டுக்கும் ஸ்மித், வோர்னருக்கும் என்ன நல்லதோ அதன்படி செயல்படுவோம். இப்போதைக்கு இதைப்பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஸ்மித்துக்கு இது கடினமான காலமே, ஆனால் அவர் மீண்டும் விரைவில் அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே எங்கள் எண்ணம், காத்திருக்க முடியவில்லை. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லி அவர்.
அதுதான் இதன் உண்மை. தனித்துவமான வீரர், நம் அணித்தலைவராக சிறப்பாக விளையாடியுள்ளார், மிகச்சிறந்த இளம் வீரர் ஸ்மித்.
நான் அவருடன் சமீபத்தில் பேசியவரையில் அவுஸ்ரேலிய அணிக்குள் மீண்டும் நுழைய துடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்மித் உறுதியாக இருப்பதை நினைத்தால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.
கூடுதலாக சில ஓவர்களை வீசுவதற்காக இன்னொரு பந்து வீச்சாளர் இருந்தால், எங்கள் அணி மெல்பேர்னில் சம அளவு சமநிலைக் கொண்ட அணியாக இருக்கும். மிட்செல் மார்ஷ் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாத ஆடுகளத்தில் முக்கியமான நபராக திகழ்வார்.
மெல்பேர்ன் ஆடுகளத்தில் லேசான ஈரப்பதம் உள்ளது. என்றாலும் அதன் வரலாறு எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என கூறினார்.