ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் அடிதடி!
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி முன்னிலையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் வரை சென்றுள்ளதுடன் தொகுதி அமைப்பாளர்கள் பியதாசவை தாக்க முயற்சித்துள்ளனர்.
உடனடியாக செயற்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், மோதலை சமரசப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் எருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்து விட்டதாக தொகுதி அமைப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டதை முழு நாடும் பார்த்ததாகவும் அதனை மறைக்க முடியாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அதனை கௌரவமாக கூறிக்கொண்ட அவர்கள், அது பற்றி தற்போது ஊடகங்கள் கேட்கும் போது பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகி வருவதுடன் பதிலளிக்க முடியாது தடுமாறுகின்றனர் எனவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் முடிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் என கூறுவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பின்னர் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியின் போது துமிந்த திஸாநாயக்க ஊடகங்களை சந்திக்கவில்லை.
அனுராதபுரத்தில் தனது வீட்டில் இருந்து வந்த அவர் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று ஊடகங்களை சந்தித்தார்.
எந்த சந்தர்ப்பத்திலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.