கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது!

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது!

இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற சர்வாதிகாரத்திற்கு நாட்டினை கொண்டுசெல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை சம்பந்தன் ஐயாவையே சாரும் என தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

.

இந்த நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சியடையும்போது முதலாவது பாதிக்கப்படுவது தமிழ் மக்களாகவே இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் பல தடவைகளில் பிச்சை வேண்டாம். நாயைப்பிடி என்ற நிலையில் செயற்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது. அதனையே நாங்கள் செய்துள்ளோம்.

நாங்கள் பேரம்பேசிக்கொண்டிருக்கின்றபோது பேரம்பேசியவர்களை துரத்திவிட்டு கடிநாயை ஏவிவிட்டபோது அந்த கடிநாயை கட்டிப்போட வேண்டிய தேவை எங்களுக்குள்ளது. அதனையே நாங்கள் செய்தோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டுசெல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும்.

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 13வது நினைவுதினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு மேலும் அதிகாரம் வேண்டும் என்று 18வது திருத்த சட்டத்தின் மூலம் அதனை நிறைவேற்றினார். அன்று அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான பியசேன என்பவரும் விலைபோயிருந்தார்.

இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்றை ஏற்படுத்தி குடியரசு ஆட்சியை முடியரசாக மாற்றும் செயற்பாடுகளில் மகிந்த ராஜபக்ஸ வெற்றியடைந்துவந்த காலப்பகுதியிலேயே இதனை அனுமதிக்க முடியாது.

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் எழுந்துவந்தன. அந்த பயணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து கொண்டது.

அந்தகாலப்பகுதியிலேயே ஜனாதிபதிதேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே ஒருவரை பிரித்தெடுத்து அந்த கட்சியின் வாக்குகளையும் பிரிக்கச் செய்து மகிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பல விடயங்களை இணைந்துசெய்தோம்.

பொதுவேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன் பிரிந்துவந்து முதல் பொதுக்கூட்டத்தில் மூன்று வாக்குறுதிகளை வழங்கினார்.

ஜனாதிபதியானவுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பேன். பாராளுமன்ற தேர்தல் முறையினை மாற்றி தொகுதிக்கு பொறுப்புக்கூறுகின்ற உறுப்பினர்களை உருவாக்கும் நிலையினை உருவாக்குவேன். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பேன் என மூன்று வாக்குறுதிகளை வழங்கினார்.

தமிழ் மக்கள் இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகவுக்கு வாக்களித்தனர். அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். அவர்கள் இருவர் மீதும் இருந்த அன்பினால் வாக்களிக்கவில்லை.

மகிந்தராஜபக்ஸவை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தனர் என நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தெரிவித்திருந்தேன்.

எவரை வெளியேற்றவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களோ அவரை மீண்டும் பதவியில் கொண்டுவந்து அமர்த்தியதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஜனாதிபதியிடம் நாங்கள் தெரிவித்திருந்தோம்.

ஜனாதிபதி முறையினை ஒழித்தல்,புதிய தேர்தல்முறைமை,தமிழ் மக்களுக்கான அதிகார பரவலாக்களுகள்களைக் கொண்டதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

2016ஆம்ஆண்டு புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

அந்த ஆண்டு பல செயற்பாடுகள் முன்கொண்டுசெல்லப்பட்டு இடைக்கால வரைவு ஒன்றினை சமர்ப்பிக்க நடவடிக்கையெடுத்தபோது அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல தடைகளை ஏற்படுத்தியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பல தடைகள் காரணமாக அது 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளிவந்தது.

அந்த நாட்களில் ஜனாதிபதியை சந்தித்து பேசினோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தடைகள் தொடர்பில் பல தடவைகள் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினோம். ஆனால் அவ்வாறு இருக்காது அதனை எவ்வாறு நிறைவேற்றியே தீருவேன் என்றெல்லாம் வாக்குறுதிகளை வழங்கினார்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இந்த நவம்பர் 07ஆம் திகதி நிபுணர்கள் வரைந்த ஒரு முழு அரசியலமைப்பு வெளிவரவிருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த நாட்டில் அரசியல்மாற்றங்கள் நடைபெற்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் அந்த அரசியலமைப்பினை தடுப்பதற்காகவே இந்த மாற்றத்தினை செய்ததாக தெரிவித்திருந்தனர்.

குறித்த அரசியலமைப்பு வந்தால் நாடு பிளவுபடும் எனவும் பலர் கூறியுள்ளனர்.இதுவும் ஒரு காரணியாக இருந்துள்ளது இந்த அரசியல்மாற்றத்திற்காக என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது.

19வது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த பிரதமரை நீக்கும் அதிகாரம் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டதன் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

அந்த அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை.தேர்தல் முடிந்த பின்னரே ஒரு பிரதமரை நியமிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.பெரும்பான்மையுள்ளவரையே அவ்வாறு நியமிக்கமுடியம்.

இதனடிப்படையிலேயே பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு இலஞ்சம் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களை தங்களது பக்கத்திற்கு ஈர்த்து அதன்மூலம் தனக்கு இல்லாத பெரும்பான்மையினை உருவாக்குகின்ற செயற்பாடுகள் நடைபெற்றன.

அமைச்சு பதவி என்கின்ற இலஞ்சமும் கொண்டுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அந்த இலஞ்சத்திற்கு துரதிர்ஸ்டவசமாக வியாழேந்திரனும் துணைபோனார்.

இலஞ்சம்கொடுத்து ஒரு பெரும்பான்மையினை உருவாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியே அதனை பின்னர் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் பேரம்பேசவந்தபோது அவர்களிடம் பேரம்பேசமுடியாத நிலையிருந்தபோதிலும் ஒருவர் சென்றார். அவ்வாறான நிலையில் பெரும்பான்மையினை விலை கொடுத்துவாற்கும் முயற்சியும் நிறைவேறவில்லை.

அவ்வாறு கிடைக்காத காரணத்தினால்தான் பாராளுமன்ற அமர்வு தடுக்கப்பட்டது,பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

அதிலும் ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தினைக்கொண்டு பாராளுமன்றத்தினை கலைத்தார். 19வது திருத்ததிற்கு முன்னர் ஒருவருடத்தில் கலைக்க முடியும். ஆனால் 19வது திருத்தம் வந்ததன் பின்னர் நான்கரை வருடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்ட காலத்தில் ஜனாதிபதியை பல தடவைகள் சந்தித்து கலந்துரையாடிய நிலையில் எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்றோம்.

இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற சர்வாதிகாரத்திற்கு நாட்டினை கொண்டுசெல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை சம்பந்தன் ஐயாவையே சாரும்.நீதிமன்றில் எங்களுக்கு நிவாரணம் கிடைக்காது என பலர் சிந்தித்திருந்தனர்.

நீதிபதிகள் சுயமாக செயற்பாடமாட்டார்கள்,துணிவாக செயற்படமாட்டார்கள் என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது.

ஆனாலும் சுயாதீன ஆணைக்குழு இயங்கிய காரணத்தினாலும் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட தொடங்கியதன் காரணமாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் துணிவாக தீர்ப்பளித்தனர்.

ஆனால் கூடுதலா நீதியரசர்களை மகிந்தராஜபக்ஸ கோரியிருந்தனர். தங்களது ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட நீதியரசர்களும் சென்றால் ஏதாவது மாற்றத்தினை செய்யலாம் என்று எண்ணி ஏழு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனாலும் ஜனாதிபதியின் செயற்பாடு சட்ட வலு அற்றது என்ற தீர்ப்பினை வழங்கியிருந்தனர்.

இந்த சட்ட நடவடிக்கையினை நாங்கள் மேற்கொண்டபோது பல இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலர் கேள்விக்குட்படுத்தினர்.

ரணிலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிமன்றம் சென்றதாக கூறினார்கள்.ரணிலுக்காக போகவில்லை. ரணில்விக்ரமசிங்க கூட இந்த செயற்பாட்டினை செய்திருந்தாலும் நாங்கள் நீதிமன்றம் சென்றிருப்போம்.

நாட்டில் ஜனநாயக குறைவு ஏற்படுகின்றபோது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வருகின்றபோது அதனை தடுத்துநிறுத்தவேண்டிய பாரிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது.

இந்த நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சியடையும்போது முதலாவது பாதிக்கப்படுவது தமிழ் மக்களாகவே இருப்பார்கள்.

இந்த நாட்டிலேயே நாங்கள் வாழ்கின்றோம். இந்த நாட்டுக்குள்ளேயே எங்களுக்கு அரசியல் தீர்வுவேண்டும் என்று கேட்கின்றோம்.நாங்கள் இப்போது தனிநாடு கேட்கவில்லை.

ஒருநாட்டுக்குள் எங்களை நாங்கள் ஆளக்கூடிய முற்றுமுழுதான தீர்வினையே நாங்கள் கோருகின்றோம். அதற்கு சர்வதேசத்தின் முற்று முழுதான ஆதரவு இருக்கின்றது.

தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாக கூறுகின்றனர்.

இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கஉள்ளது என இன்று பலர் கூறுகின்றனர்.

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மகிந்த ராஜபக்ஸவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது.அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டிய ஒரு தேவையிருந்தது.

நாங்கள் பல தடவைகளில் பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் செயற்படவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

கடிநாயை கட்டிவைக்கவேண்டிய தேவையிருக்கின்றது. அதனையே நாங்கள் செய்துள்ளோம்.நாங்கள் பேரம்பேசிக்கொண்டிருக்கின்றபோது பேரம்பேசியவர்களை துரத்திவிட்டு கடிநாயை ஏவிவிட்டபோது அந்த கடிநாயை கட்டிப்போடவேண்டிய தேவை எங்களுக்குள்ளது. அதனையே நாங்கள் செய்தோம்.

நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது.இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.

அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மகிந்தராஜபகஸ அலைவதில் தெரிகின்றது.

இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்க வேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது.

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது.

இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டுசெல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net